Wednesday, March 31, 2010

சமச்சீர்க்கல்வி – கருத்தியல் சார்ந்த எதிர்பார்ப்புகள்

கடந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட சமச்சீர்க்கல்வி அறிக்கையின்படி பள்ளிக்கல்வியில் தமிழ்வழி/ஆங்கிலவழி மணவர் விகிதம் 80:20 என்று உள்ளது....
ஆங்கிலவழிப் பள்ளிகளின் பெருக்கம் இனியும் தொடர்ந்தால்... இதுவே 20:80 ஆகி.. 100:0-ஐ நோக்கிச்சென்றுவிடும் ஆபத்துள்ளது!

சமச்சீர்க்கல்வி அமலாக்கத்திற்கு அழுத்தம் தரும் அதே சமயத்தில், இடைக்கால நடவடிக்கையாக ஆங்கிலவழி மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் விழுக்காட்டிற்கு ஒரு உச்சவரம்பு நிர்ணயித்து தனியார்/அரசுப் பள்ளிகட்கு அவசர ஆணை/சட்டம் பிறப்பித்திட அரசினரை நெருக்கிட வேண்டும். (ஏற்கனவே, அரசுதவிப் பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புகளின் எண்ணிகையானது, தமிழ்வழி வகுப்புகளின் எண்ணிக்கைக்கு மிகாமல் இருக்க நடப்பு கல்வியாண்டு முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக நாளிதழ் செய்திகள் கூறுகின்றன. அதாவது, அரசுதவிப் பள்ளிகளில் இப்போதைக்கு 50க்கு 50க்கு என தமிழ்/ஆங்கில வழி வகுப்புகள்..!)     

அண்மை நாளிதழ் செய்திப்படி.. ஒரே பாடத்திட்டமுறையை செயலாக்கும் சமச்சீர்க்கல்வி வந்தால் விரும்பிய பாடத்திட்டத்தை தெரிவு செய்யும் பெற்றோர்களின்/மாணவர்களின் உரிமை போய்விடுமே என்று ஓலமிட்டவர்கள் (பின்னணியில் கொள்ளைவிலை பாடநூல்கள் விற்கும் தனியார் பதிப்பகங்கள்?), இப்போது அதனைக் கைவிட்டு “சமச்சீர்க்கல்வி விசயத்தில் பயிற்றுமொழியைச் சம்பந்தப்படுத்தி  குழப்பக்கூடாது என்று புதுப்பாட்டு பாடத்தொடங்கியிருக்கிறார்கள்.

சமச்சீர்க்கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டால் “ஒரே பாடத்திட்டம் மட்டும் அமலாக்கப்பட்டு, சாதுரியமாக, “ஒரே பயிற்றுமொழி கொள்கை கழற்றிவிடப்படும் வாய்ப்புள்ளது  (ஏனெனில், கல்வி வணிகர்களுக்கு காசு பறிக்க ஆங்கிலவழி எனும் கவர்ச்சி அம்சமாவது  தேவைப்படுகிறது!..

மேலும், உலகமயம் மற்றும் உலகொன்றிய பார்வை (cosmopolitan view) குறித்து பேசும் அறிவுஜீவிகளும் ஆங்கிலவழியை இழுத்துப்பிடிக்கும் நிலையும் உள்ளது!)..
மேலும், சமச்சீர்க்கல்வி அறிக்கையில், மொழிச்சிறுபான்மையர் (தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன்) தம் தாய்மொழியைக் கற்க அளிக்கப்பட்டுள்ள வாய்ப்பு, மும்மொழித்திட்டத்திற்கு கம்பளம் விரித்திட வாய்ப்பாகக்கூடாது என்ற கவலையும் உள்ளது!
நம்முன் உள்ள வெட்கிட வைக்கும் வினாக்கள்...

தம்மவர்க்கு மட்டும் தமிழ்ப் பெயரைச்சூட்டிக்கொண்டால் மட்டும் போதுமா?.

நம்மில் எத்துணை பேர்......

-இல்லங்களுக்கும் நிறுவனங்களுக்கும் தமிழில் பெயரிட்டிருக்கிறோம்?

-சூட்டிய தமிழ்ப் பெயரை மொழிபெயர்க்காமல் உள்ளபடியே ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறோமா?

நிறுவனங்களின் பெயர்ப்பலகை / ஊழியர்களின் அடையாள அட்டை / வருகைப் பதிவேடு மற்றும் அன்றாட கணக்குப்பதிவுகளை தமிழில் பேணுகிறோமா?

நிறுவன நிர்வாகம்-ஊழியர்கள் / நிர்வாகம்-நுகர்வோர்கள்... இவர்களுக்கிடையேயான தரவு/தகவல் பரிமாற்றத்தொடர்புகளை தமிழில் மேற்கொள்கிறோமா?

…………..மொத்தத்தில், ஒரு நிறுவனம், அயலகம்/அயலவர் வணிகத்தொடர்புக்கு மட்டும் ஆங்கிலத்தை பயன்படுத்தும் வகையில் அதாவது, புறத்தொடர்பு தமிழ் ஆவணங்களை மொழிபெயர்க்கும் பணியோடு மட்டும் நிற்கும் கோப்பினுள் மட்டும் இருக்கும் உள்ளுறை மொழி(Latent language)யாக மட்டுமே ஆங்கிலம் இருக்கட்டும்!.
-----அகமத் கனி

Monday, March 22, 2010

தமிழ் எழுத்துச் சீர்மை

01. 1930களிலேயே பெரியாரால் வலியுறுத்தப்பட்ட தமிழ் எழுத்துச்சீர்திருத்தம், 1978ல் நடைமுறைப்படுத்தபட்ட முதற்கட்ட நடவடிக்கையோடு நின்றுபோய்விட்டது.

1989-ல் வா.செ.குழந்தைசாமி குழு பரிந்துரைத்த அறிக்கை, கிடப்பில் போடப்பட்டுவிட்டது..

அது உகர, ஊகார குறியீடுகளில் சீர்மை பற்றி மட்டுமே பரிந்துரைத்தது.

இதன் புதிய 2 குறியீடுகளை மட்டும் ஏற்று, நடைமுறைப்படுத்தி தமிழ் வரிவடிவங்களின் எண்ணிக்கையை வெறும் 39 ஆகக் குறைக்க முடியும்.... யாரும் வலியுறுத்தக் காணோம்!

மேலும், எழுத்துச்சீர்மையின் நன்மைகளாக...

01. குழந்தைகள் எளிதாக எழுத்துகளைக் கற்கலாம்.

02. தமிழுக்குப் புதியவர்கள் விரைவாகக் கற்கலாம்.....................................

என்று மட்டுமே அறிகிறோம். இவற்றோடு கூட,

03. குறியீட்டுச்சீர்மை, விரைவான வாசிப்புக்கு உதவும்.

04. குறியீட்டுகளின் சீர்மை மற்றும் எளிமை, பிற மொழியினரும் தாமே எழுத்துக்கூட்டி தமிழைக் கற்க தூண்டும்.

இம்முயற்சியில், விடுதலை நாளிதழ் அன்றாடம் ஒருபத்தியை, நடப்பு வடிவத்திலும் அதன் கீழே சீர்திருத்த எழுத்துவடிவத்திலும் வெளியிட்டு வருகிறது...

-----அகமத் கனி

சொல் வங்கி

01. அறிவியல்/ஆட்சி/நீதித்துறைகளுக்கான கலைச்சொற்களுக்காக இணைய வழியில் அணுகத்தக்க வகையில் சொல்வங்கி அமைத்திட வேண்டும். இதன் மூலம் அகராதிகள்/கலைக்களஞ்சியங்களை வாங்கும் வழிவகைகளையும் (Hyperlink மூலம்) அளிக்கலாம்...

பெரும்பாலும் வாசகர்களின்/ஆர்வலர்களின்/அறிஞர்களின் சொல்லாக்கங்களைத் தரப்படுத்தி பதிவேற்றலாம்.

ஏனெனில், பல ஆண்டுகளுக்கு முன் ராணி வாரயிதழ் வாசகர்களின் பங்கேற்பு/பங்களிப்பு மூலம் அன்றாட வாழ்வில் பயன்படும்

கருவிகள்/உதிரிபாகங்கட்கான எண்ணிறந்த கலைச்சொற்களை வெளியிட்டது... அதே உத்தியை “சொல் வங்கிஉருவாக்கலுக்கும்

பயன்படுத்தலாம்... ராணியின் பங்களிப்பையும் உள்வாங்கிக் கொள்ளலாம்.

-----அகமத் கனி



Monday, March 15, 2010

கணினி மற்றும் கல்வி

01. தமிழுக்கு ல/ழ/ள இருக்கும்போது ஒரு ”ல” தான் என தன்னிச்சையாக, மைய அரசு Unicode Consortium”த்திடம் கூறி எதச்சதிகாரமாய் நடந்துகொண்டது. அதனால் இணையத்தில் தமிழ் எழுத்துகள் விரைவாக பதிவிறக்கம் ஆவதில்லை... இதனால் த.நா. அரசே Unicode Consortium-ல் தன்னை உறுப்பினராக்கிக் கொண்டுள்ளது... கூடுதல் இடங்கள் கோரி போராடுகிறது... தமிழர்கள்/விற்பன்னர்கள் தொடர்ந்து அழுத்தம் தரவேண்டும்.

02. கணினி/இணையப் பயன்பாடு பெருகி, காகிதப் பயன்பாடு அருகி வரும் இக்காலகட்டத்தில் இணைய மையங்களில் ஆங்கிலப் பயன்பாடு மட்டுமே இருக்கிறது.. சொந்தமாக கணினி வைத்திருக்காத ஒருவர் – தமிழில் ஆவணங்கள் தயாரிக்கவோ, மின்னஞ்சல் அனுப்பவோ தடுமாற வேண்டியுள்ளது. அல்லது பயன்படுத்த வாய்ப்பில்லமலேயே திரும்பிவிட நேரிடுகிறது.
இதனால், ஆங்கிலத்தை மட்டுமே பயன்படுத்தி தங்கள் வேலையை முடித்துக் கொள்கின்றனர்.!
ஏனெனில், அங்கு தமிழில் தட்டச்சு செய்வதற்குரிய மென்பொருள் நிறுவப்பட்டிருக்கவில்லை. எனவே இணைய மையங்களில் தமிழில் தட்டச்சு செய்ய உரிய மென்பொருள் நிறுவப்பட வேண்டும். தமிழ் எழுத்துகள் பொறித்த (Tamil 99) ஆங்கில விசைப்பலகைகள் குறைந்தது பாதி எண்ணிக்கையிலாவது அமைத்திட வேண்டும்.


03. கணினித் தமிழுக்காக கணித்தமிழர்கள் அரும்பாடுபட்டு
ஆராய்ந்து உருவாக்கிய அரசு அங்கீகாரம் பெற்ற விசைப்பலகை
Tamil99தான்! அதன் மூலம் ஆங்கிலவழித் தட்டச்சை விட விரைவாக
உள்ளிட முடியும். ஏனெனில், அதில் தமிழ் எழுத்துகளுக்கு
மாற்று (shift key) விசையை ஒருபோதும் பயன்படுத்த
வேண்டியதில்லை.
எனவே இம்முறையே நிலைபெற்றிட – கணினித்தமிழில் கவனம்
செலுத்திட பள்ளிகளில் எட்டாம் வகுப்பிலேயே தமிழ்99 தட்டச்சுப்
பயிற்சி,
ஆங்கிலத் தட்டச்சுப் பயிற்சிக்கு முன்னரே அளிக்கப்படவேண்டும்
(முதலிலேயே ஆங்கிலத் தட்டச்சுப் பயிற்சி கொடுத்தால்,
ஆங்கிலவழித் தமிழ் தட்டச்சுக்கு மாறி விடுவர்.!). Tamil 99 தட்டச்சுப்
பயிற்சியில் இயல்பான – சராசரி வேகம் கிட்டிட ஒருவாரப்
பயிற்சியே போதுமானது! – இதை கல்வித்துறையினரே செய்திட
வேண்டும்... தமிழார்வலர்களும் பரப்பிட வேண்டும்!

04. இன்றைக்கு ஒருவருக்கு ஒரு கணினி என்றில்லாவிட்டாலும், ஒருவருக்கு ஒரு கைப்பேசி என்றாகிவிட்டது. கணினிச் செயல்பாடுகளும் கைப்பேசியில் இடம்பெறத் தொடங்கிவிட்டன.
இந்நிலையில் கைப்பேசிவழி தமிழில் குறுஞ்செய்தி அனுப்பும் வசதியை – சில நிறுவனங்கள் அளித்தபோதும் – நாம் அக்கறை


காட்டாமல் ஆங்கிலத்திலும், ஆங்கிலவழித்தட்டச்சு மூலம் தமிழிலும் பயன்படுத்துகிறோம்.
அஞ்சல்முறை தீவிரமாயிருந்த காலத்தில் நாம் வாழ்த்துஅட்டைகள், பரிசுப்போட்டி படிவங்கள் – இவற்றிலாவது எழுத்துத் தமிழை பயன்படுத்தினோம். கைப்பேசி வந்தபின் இதுகூட அற்றுப்போய்விட்டது...
ஆகவேதான் - தமிழில் குறுஞ்செய்தி மற்றும் அறிவிப்பு விடல் – பெருகிட வேண்டும்.
மேலும், விரைவான உள்ளிடலுக்கு (ஆங்கிலம், இந்திக்கு வழங்கப்பட்டுள்ளதை போல) T9 (Dictionary Facility) வசதியை – கைப்பேசி தயாரிப்பாளரிடம் தமிழுக்கும் கோரிப்பெற வேண்டும். இன்றைக்கு அரியானாவில் அரசினரே வேளாண்மை/வானிலைக் குறிப்புகளை உழவர்களின் கைப்பேசி எண்களுக்கு இந்தியில் குறுஞ்செய்தி மூலம் அனுப்பிவிடுகிறது.... இதனை நம் மாநில அரசு கவனத்திற் கொள்ளவேண்டும்.

05. அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வீழ்ச்சி காரணமாக எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் தொடங்க அரசு திட்டம் (கல்வி அமைச்சர். நாளிதழ் செய்தி 20.12.08)... எனில், முதல் வகுப்பிலிருந்து தொடங்கும் ஆங்கிலப்பயிற்சி எல்.கே.ஜி.யிலிருந்தா? அந்த கொடுமை நிகழக்கூடாது

-----அகமத் கனி

மரபு சீர்கேடு/சீராக்கல்

01. வானொலியில் ஆகாஷ்வாணி, சிறீ, சிறீமதி என்பதெல்லாம் போய்விட்டாலும்.. சகவருஷம் குறிப்பிடுவதும், கோடை/சம்பா போன்ற பயிர்ப்பட்டங்களைத் தவிர்த்து காரிப்/ராபி போன்ற வடபெயர் வழங்கி வருவதும் தமிழர் வாழ்க்கை/பண்பாட்டு மரபை மறக்கவைத்து சிதைப்பதாகும்.

02. அரசினர் தி.ஆ.வை நடைமுறைப்படுத்திய பின் ஏன் தொடர்ச்சியற்ற 60ஆண்டு முறையை இன்னும் குறிப்பிட வேண்டும்? 60ஆண்டு முறைக்குப்பதிலாகத்தானே தி.ஆ.!

03. அரசினர்/தனியார் வழங்கிடும் பண்டிகைக்கால போனசை பொங்கலுக்கு என வழங்கி பொங்கல் ஒன்றே தமிழரின் முழுமுதல் திருநாள் (பண்டிகை) என முதன்மைப் படுத்தவேண்டும்.


-----அகமத் கனி