Sunday, February 8, 2009

ஈழப் போராட்டத்தால் வெளிச்சமாகும் உண்மைகள் இந்தியாவிற்குப் பங்காளி யார்? பகையாளி யார்? .... கலைவேலு

"கேட்டினும் உண்டு ஓர் உறுதி' என்பார் வள்ளுவர். தீமையும் நன்மை பயக்கும் என்பது அதன் பொருள். நட்பை அளக் கும் அளவுகோலாக அத்தீமை பயன்படும் என அடுத்து அதற்கு அவர் விளக்கம் கூறுவார்- “இளைஞரை நீட்டி அளப்பது ஒர் கோல்'' தனிமாந்தனுக்கும் இக் குறள் வழிகாட்டுகிற தெனினும் இது முற்றிலும் அரசியலுக்கான குறள். பொருட்பாலில் அரசியலுக்கு அடுத்து வரும் அங்க இயலில் "நட்பு ஆராய்தல்' அதிகாரத்தின் கீழ் இக்குறள் வருகிறது. “அரசியல் நடாத்துதற்கண் ஒன்றற்கு ஒன்று துணையாய அங்கங்கள்'' என அங்க இயலுக்கு விளக்கம் கூறுவார் பரிமேலழகர்.

இக்குறள் முன்னெப்போதைக் காட்டிலும் இப்போது தமிழர் களுக்கு மிகவும் பொருத்தமான தாய் அமைந்து பல உண்மைகளைப் புரிய வைக் கிறது. கையெட்டும் தொலை வில் நாளும் செத்து மடியும் ஈழத் தமிழர்களைக் காப்பாற்றத் தமிழகமே ஒன்று திரண்டு குரல் கொடுத்தது. பட்டி தொட்டி களிலெல்லாம் ஆர்ப்பாட்டம், மறியல், ஊர்வலம், உண்ணாநிலைப் போராட்டங் கள் எனப் பலவும் நடைபெற்றன. இராமேசுவரத்தில் தமிழ்த் திரையுலகமே திரண்டு நின்று பரணி பாடியது. கொட்டும் மழையிலும் சென்னையில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கெடுத்த மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. சட்டமன்றத்தில் ஒருமனதாய்த் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக முதல்வர் தலைமையில் கட்சிகள் அணிவகுத்துச் சென்று தலைமையமைச்சர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்தன. தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் நடுவண் அமைச்சர்களும் தலைமை அமைச்சரைக் கூட்டாகவும், தனித்தனியாகவும் சந்தித்தனர்.

தமிழ்நாட்டுக் கட்சிகள் அனைத்தும், அவை அனைத் திந்திய அளவில் இயங்கு கின்றவையே ஆனாலும், தமிழ்நாட்டிற்குள் மட்டுமே செயல்படுகின்ற கட்சிக ளானாலும், அவற்றுக்குள் ஈழத் தமிழரா, விடுதலைப் புலிகளா என்பதிலோ அல்லது ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வா, தனி ஈழமா, என்பதிலோ கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் போர்க் கொடுமைகளிலிருந்து ஈழத் தமிழரைக் காப்பாற்ற வேண்டு மென்பதில் எந்த வேறுபாடும் இல்லை. விடுதலைப் புலிகளை எதிர்க்கும், ஆதரிக்கும் கட்சிகள் அனைத்தும் ஈழத் தமிழர் துயர் துடைப்பதில் ஓரணியில் நிற் கின்றன. அவற்றிற்குப் பின்னால் தமிழர்களும் ஒன்றுபட்டு நிற் கிறார்கள். ஆனால் தமிழ் நாட் டின் எல்லைகளைத் தாண்டி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாய்க் குரல் கொடுப்பவர் யார்? கட்சிகள் யாவை? ஊடகங்கள் யாவை? தமிழ் மக்களின் துயரைப் பகிர்ந்துகொண்ட தமிழர் அல்லாத பிற இனத்தவர் / மாநிலத்தவர் யார்?

தமிழ் மக்களைப் பொறுத்த வரை எங்கு துயரங்கள் சூழ்ந்தாலும் அங்கெல்லாம் ஓடோடிச் சென்று உதவும் மனம் படைத்த வர்கள். குசராத் நிலநடுக்கம், ஒரிசா புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் என்றாலும், வங்காளப் போர், கார்கில் போர் போன்ற போர்த் துயரங்கள் என்றாலும், தமிழர்கள் கோடி கோடியாய்க் கொட்டிக் கொடுத்துள்ளார்கள். ஆனால் தமிழ்நாட்டுத் தமிழன் தன் சொந்தங்களுக்காய் அழுது அரட்டி, கண்ணீர் விட்டுக் கதறியபொழுது தமிழ்நாட்டிற்கு அப்பாலிருந்து கண்ணீர் துடைக்க எந்தக் கைகளும் நீண்டு வர வில்லையே! ஈழத் தமிழர் களாவது அவர்கள் கணக்கில் எந்தத் தொடர்புமற்ற வேற்று நாட்டு அந்நியர்களாய் இருக்க லாம். ஆனால் அவர்கள் கணக்கில் சொந்த இந்தியர்களாய்க் கருதப்படும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற் படையால் சுட்டு வீழ்த்தப்படுகிறார்களே! இக்கொடுமையைக் கண்டித்து வடக்கிருந்தும் வேறெங்கிருந்தும் எந்தக் குரலும் எழவில்லையே!

தமிழ்நாட்டில் ஈழத் தமிழர் ஆதரவு எழுச்சியை மீண்டும் கிளர்ந்திடச் செய்ததில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சிக்குப் பெரும் பங்கு உண்டு. ஈழத் தமிழர்கள் அக்கட்சிக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டவர்கள். ஆனால் கட்சியின் தமிழ்நாட்டுக் கிளைதான் பெரு மளவில் குரல் கொடுக்கிறது. பெருமளவில் போராடுகிறது.

இதற்கு ஈடாக அதன் அனைத்திந்தியத் தலைமையிட மிருந்து எந்தப் பெரிய வெளிப்பாடும் இல்லையே! பாண்டிய னும் நல்லக்கண்ணுவும் தாமே பேசுகிறார்கள். நாடாளுமன்றத் திற்குள்ளும் வெளியேயும் இராசாதாமே போர் முழக்கம் செய்கிறார்! பாலசுத்தீனத்தின் மீதான இசுரேல் தாக்குதலைக் கண்டிக் காத இந்தியக் கட்சிகள் எதுவும் இல்லை எனலாம். ஏதுமறியா அப்பாவிப் பாலசுதீனியர்கள் கொடூரமாகக் கொல்லப்படுவதை இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்டு) கடுமையாகக் கண்டித்துள்ளது. “இசுரேலின் கொடூர அட்டூழியத்தை எதிர்த்தும் இசுரேல் உடனான இராணுவ / பாதுகாப்பு உறவு களை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியும் கட்சியின் அனைத்துக் கிளை களும் கண்டனம் முழங்க வேண் டும்'' என கட்சியின் தலைமைக் குழு (பொலிட் பீரோ) கேட்டுக் கொண்டுள்ளது. கண்டித்து முழங்க வேண்டியதுதான். நாமும் அவர்களோடு சேர்ந்து முழங்குகிறோம்.

ஆனால் வங்காளத்துக்கு நேர் தெற்கே இந்தியாவை ஒட்டிய தீவொன்றில் ஒவ்வொரு நாளும் மனித உயிர்கள் செத்து வீழ்கின்றனவே; அந்தப் பாவப்பட்ட மனிதப் பிறவிகளுக்காக, பாலசுத்தீன மக்களுக்காக வீறிட்டுக் கிளம்புகின்ற அதே உணர்வலையில் ஆதரவுக் குரல் காரத்தின் தொண்டையிலிருந்தோ அவரது "காம்ரேடு'களின் தொண்டைகளிலிருந்தோ கிளம்பியது உண்டா? சிங்களவன் வீசிய வான் குண்டில் செஞ்சோலைச் சிறார்கள் கால் வேறு கை வேறாய்ச் சிதறித் செத்தார்களே, அந்தக் கோரப்படு கொலையைக் கூட காரத் தும் காம் ரேட்களும் திட்டவட்டமாகக் கண்டிக்க வில்லையே! இலங்கையில் கடந்த கால் நூற்றாண்டாக நடைபெற்று வரும் இனப்படுகொலையைக் கண்டித்தும் சிங்களப் பேரின வாதத்தைக் கடிந்தும் மார்க்சிசுட் தலைமைக்குழு எப்பொழுதாவது தீர்மானம் நிறைவேற்றியது உண்டா?

அடிமைப்பட்டு அல்லலுறும் மக்கள் உலக உருண்டையில் எக்கோடியில் இருந்தாலும் அவர்களுக்காய் ஓங்கிக் குரல் கொடுத்துப் போராட வேண்டிய பொதுவுடைமைக் கட்சிகளின் நிலையே இப்படியென்றால் பிற கட்சிகளின் நிலையைக் கூற வேண்டியதில்லை. அத்வானி யின் பாசக தொடங்கி அம்மா மாயாவதியின் பகுசன் சமாசுக் கட்சி ஈறாக எந்தக் கட்சியும் தமிழ் மக்களுக்காகச் சுண்டு விரலைக்கூட அசைக்கவில்லை என்பதே உண்மை. மும்பைத் தாக்குதலில் மாண்டுபோனவர் களுக்காய் வீறுகொண்டு எழுந்து பாகிசுத்தானை வீழ்த்தி "சம்ஹாரம்' செய்ய வேண்டும் என முழங்குகின்ற இக்கட்சிகள் சிங்களவன் குண்டில் வங்கக் கடலில் மூழ்கி மாண்டுபோன தமிழ் மீனவர்களுக்காய் ஒரு சொட்டுக் கண்ணீரைக் கூட சிந்தியதில்லையே! சிங்கள இனவெறி அரசைச் சிறிதேனும் கண்டித்ததில்லையே!

ஆளும் காங்கிரசுக் கட்சியைப் பொறுத்தமட்டில் அது என்றைக்குமே தமிழர்களுக்கு ஆதரவாய் நின்றதில்லை. இதில் இராசீவ்காந்தி கொலைக்கு முன், பின் என்றெல்லாம் இல்லை. இராசீவுக்காக அவர்கள் வடிக்கும் கண்ணீர் வெற்று நீலிக்கண்ணீரே! தில்லியை ஆண்ட காங்கிரசுக் கட்சி நேரு காலம் தொடங்கி இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட பொழுதெல்லாம் வெறும் கண்டனம் தெரிவிப்பதோடு நிறுத்திக் கொண்டுள்ளது. வேண்டுமானால் கண்டனத் தோடு வருத்தத்தையும் சேர்த்துக்கொள்வார்கள். தமிழர் சிக்கலுக்குத் தீர்வுகாணப் பன்னாட்டளவில் உருப்படியான எந்த ஓர் அரசியல் நடவடிக்கையும் எடுத்ததில்லை. கொரியாப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததிலும் சூயசுக் கால்வாய்ச் சிக்கலுக்குத் தீர்வுகண்டதிலும் நேருவின் வெளிநாட்டு உறவுக் கொள்கைக்குப் பெரும்பங்கு உண்டு என்று பெருமை பேசுவர். ஆனால் பெருமைக்குரிய இந்த இந்திய வெளியுறவுக் கொள்கை சிங்களவர் - ஈழத் தமிழர் சிக்கலை இது வரையும் தீர்க்கவில்லையே!

முன்பே சுட்டியதைப் போல, ஈழத் தமிழர்கள் இந்தியரோடு தொடர்பில்லாத அந்நிய நாட்டவராய் இருக்கலாம். ஆனால் வெள்ளையர் காலத்தில் இங்கிருந்து கொண்டு செல்லப் பட்டுத் தம் இரத்தத்தைச் சிந்தி கண்டி மலைக்காடுகளைப் பொன்கொழிக்கும் தேயிலைத் தோட்டங்களாய் உருமாற்றினார் களே, அந்த இந்தியத் தமிழர்களைப் பற்றியாவது பேராயக் கட்சி கண்டுகொண்டதுண்டா? வெள்ளையர் காலத்தில் கொண்டு செல்லப்பட்ட வழியில் நோய்த் தாக்குண்டும் மலைக் காடுகளில் அட்டைக்கடிபட்டும் செத்துப் போன தமிழர்கள் ஆயிரக்கணக்கில்! வெள்ளையன் சென்ற பின் இலங்கையில் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசு அந்த நாட்டின் பொருளாதார வளத்திற்கு அடித்தளமிட்ட இந்தியத் தமிழர்களை நாடற்றவர்களாக்கியது. இந்திய அரசு அந்தக் கொடுமையைக் கண்டு கொண்டதா? கட்சிகள் கண்டு கொண்டனவா? அன்றும் தமிழ் நாட்டுக் கட்சிகளும் தமிழர்களுமே குரல் கொடுத்தார்கள்.

ஆடு, மாடுகளைப் போல் அங்கிருந்து மூன்றிலக்கத்திற்கும் மேற்பட்டவர்களை இறக்குமதி செய்துகொள்ள மட்டுமே இலங்கையுடன் ஒப்பந்தம் போட்டது இந்திய அரசு. (சாசுத்திரி - பண்டார நாயக்கா ஒப்பந்தம்) நம்மில் சிலர், இந்திரா காந்தி ஆண்டபொழுது அவர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருந்த தாக நம்புகிறார்கள். அப்போதைய வெளி யுறவுச் செயலாளர்களான பார்த்தசாரதி, வெங்கடேசுவரன் ஆகியோர் ஓரளவுக்கு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருந்தது என்னவோ உண்மை தான். ஈழப் போராளிகளுக்குப் போர்ப் பயிற்சி கொடுத்ததும் உண்மை தான். புலிப்படையினர் கொளத்தூர் மலைக் காட்டு முகாம்களில் பயிற்சி எடுத்துக் கொண்டதும் உண்மை தான். ஆனால் இவற்றிற்குப் பின்னால் இந்திய வல்லாதிக்கச் சூழ்ச்சி இருந்தது என்பதை மறந்துவிடக் கூடாது. தெற்காசியாவின் கேள்வி கேட்கவொண்ணாத வல்லரசாக இந்தியா திகழ வேண்டும் என்பதே அன்றும் இன்றும் இந்தியப் பேரரசின் விருப்ப மாகும். தங்கள் விரிவாக்கத் திட்டத்திற்கு ஈழப் போராளிகளை சதுரங்கக் காய்களாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். அவர்களைத் தங்கள் கட்டுக்குள் வைத்திருக்க இயக்கங்களுக்கிடையே பகையும் பிளவும் மூட்டினார்கள்.

இந்தியாவிற்குத் தலையாட்டும் போராளிக் குழுக்களை உருவாக்கினார்கள். இந்தியச் சூழ்ச்சிக்கு இரையாகாத, பணிய மறுத்த விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவதே அன்றிலிருந்து இன்று வரை இந்திய அரசின் திட்டமாய் இருக்கிறது. தில்லியை எந்தக் கட்சி ஆண்டாலும் மாற்ற வொண்ணா வெளியுறவுக் கொள்கை இதுவே. இராசீவ் கொலை இத்திட்டத்திற்கான ஒரு துருப்புச்சீட்டே! அரசியலாளர்கள், ஆளும் வர்க்கத்தினர் ஆகிய இவர்களின் நிலைதான் இப்படியென்றால் மாந்தநேயத்தோடும் நடுவுநிலை யோடும் செயல்பட வேண்டிய அறிவாளர்கள், இதழாளர்கள், ஊடகர்கள் முதலானோர் ஈழத் தமிழர் சிக்கலை எப்படி அணுகுகிறார்கள்? தமிழர்களும் இந்தியர்கள்தாம், அவர்க ளுடைய சிக்கல்களை, துயரங் களை, கவலைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும், அவற்றை வெளிப்படுத்த வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் செயல்படுகிறார்களா? தமிழர்களுக்கு ஆதரவாக வேண்டாம், ஊடகர்களுக்கான நடுவுநிலை அறத்தோடு இவர்களின் செயல்கள் அமைந்துள்ளனவா? இக்கேள்வி களுக்கு விடையைத் தேடினாலும் ஏமாற்றமே மிஞ்சும்.

மும்பைத் தாக்குதலை நேரடியாக நான்கைந்து நாள்கள் ஒளிபரப்பியதைப் பற்றி நாம் இங்கே கேள்வி கேட்கப் போவ தில்லை. ஆனால் இரசினிகாந் தின் சிவாசி படத்தைப் பற்றியும் குசேலர் படத்தைப் பற்றியும், நாள் கணக்கில் திரும்பத் திரும்பச் செய்திகளாக வெளியிட்ட சிஎன்என்அய்பிஎன், என்டிடிவி வகையறா தொலைக்காட்சிகள், குசுபு சிக்கலை (தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்த அவர் கருத்தும் அதற்கான எதிர்வினையும்) செய்திகளாக்கியதோடு மட்டும் நிற்காமல், தமிழ்நாட்டிற்கு ஓடோடி வந்து நேரலைக் கலந்துரையாடல்கள் ஒளிபரப்பிப் பெண்ணிய முழக்கமிட்ட தொலைக்காட்சிகள் தமிழ்நாட்டில் ஈழத் தமிழருக்கு ஆதரவாய் நடைபெற்ற போராட்டங்களை அறவே இருட்டடிப்புச் செய்தன. இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் உண்ணா நிலைப் போராட்டம் தொடங்கி, கொட்டும் மழையில் இடம் பெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டம் முடிய எதையுமே அவை மதித்து ஒளிபரப்பவில்லை. ஏன், கண்டு கொள்ளவே இல்லை என்பது தான் உண்மை.

ஈழ ஆதரவுப் போராட்டங்கள் குறித்து அமைதி காத்துப் பேசா நோன்பு கடைப்பிடித்த இதே தொலைக்காட்சிகள் கிளிநொச்சிக்குள் சிங்களப் படை நுழைந்த அடுத்த நொடியே மகிழ்ச்சிப் பெருக்குடன் போட்டி போட்டுக்கொண்டு கிளிநொச்சி வெற்றிச் செய்தியை ஒளிபரப்பின. "புலித் தலைவர்களின் கதி என்ன?', "பிரபாகரன் காட்டிற்குள் தப்பி ஓட்டம்', "பிரபாகரனைத் தேடும் வேட்டையில் இலங்கைப்படை', "பிரபாகரன் உயிருடன் பிடிபடுவாரா?' இப்படி இன்னும் இன்னும் பல்வகைத் தலைப்புச் செய்திகள்.

உண்ணாநிலைப் போராட்டம், மனிதச் சங்கிலிப் போராட்டம் ஆகியவற்றின் போது எந்தச் செய்தியாளருடனும் தொடர்புகொண்டு ஒளிபரப்பாத இத்தொலைக் காட்சிகள் சிங்களப் படையின் "வெற்றியை' சென்னை செய்தியாளர், மும்பைச் செய்தியாளர், தில்லிச் செய்தியாளர் எனப் பல்வேறு செய்தியாளர்களுடன் நேரலைத் தொடர்புகொண்டு ஒளிபரப்பின. "சிங்கள ரத்தினா' இந்து ராம், முன்னாள் "ரா' இயக்குநர் இராமன், முன்னாள் இந்திய அமைதிப் படைத் தளபதி அரிகரன் எனப் பல பார்ப்பன அறிவாளிகளோடும் போரியல் வல்லுநர்களோடும் தொடர்பு கொண்டு அவர்களது மேலான அறிவார்ந்த (?) கருத்துகளை ஒளிபரப்பி "புலித் தோல்வியை' உறுதிப்படுத்தின. சுருங்கச் சொல்லின் சிங்கள இனவெறி ஆட்சியாளர்களும் ஊடகங்களும் கிளிநொச்சி வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்ததைக் காட்டிலும் அதிகமாக இந்திய ஊடகங்கள் பேருவகையோடு கொண்டாடிக் களியாட்ட மிட்டன.

ஈழச் சிக்கலைப் பரிவோடு அணுகுகின்ற அறிவாளர்களை தமிழகத்திற்கு அப்பால் காண்பது அரிதிலும் அரிது. விரல் விட்டு எண்ணி விடலாம். இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களின் துயர்கண்டு இரங்கி அவர்களும் சமவுரிமை யோடு வாழ வேண்டும் என்ற அக்கறையோடு இயங்கும் அறிவாளர்கள் மிகவும் குறைவு. எளிய சிங்களப் பொதுமகன் தொடங்கி எல்லாம் கற்றுணர்ந்த சிங்கள அறிவாளி வரை ஈழத் தமிழரைப் பகை கொண்டே நோக்குவர். இங்கே இந்தியத் திருநாட்டிலும் அறிவாளி வர்க்கம், ஈழச் சிக்கலானாலும் காசுமீரச் சிக்க லானாலும் "இந்திய' நலன் கொண்டே நோக்குகிறது. அதில் "இந்து' நலனும் அடங்கியிருக்கும். இந்த "இந்து' நலன் என்பது இறுதி யாகப் பார்த்தால் பார்ப்பன - பனியா நலனே தவிர வேறல்ல.

இந்நலன்களுக்கு எதிரான எல்லாவற்றையும் இவர்களும் பகைக் கண் கொண்டே நோக்குவார்கள். அவர்கள் பார்வையில் ஈழத் தமிழர் ஆதரவும், ஈழ விடுதலை ஆதரவும் இந்திய இந்து நலன்களுக்கு எதிரானவை. சிங்கள அறிவாளி கள் சிங்களப் பவுத்தமயமானவர்கள். இந்திய அறிவாளிகள் இந்திய இந்துமயமானவர்கள். ஈழத் துயரம், வள்ளுவர் சொன்னாரே, "கேட்டினும் உண்டு ஓர் உறுதி' என்று, அது போல சில பல நன்மைகளையும் செய்திருக்கிறது; பல உண்மைகளை விளங்க வைத்திருக்கிறது; வெளிச்சமாக்கியிருக்கிறது. நாம் என்னதான் இந்தியர் இந்தியர் எனப் பெருமைப்பட்டுக் கொண்டாலும், "மற்றவர்கள்' நம்மை இந்தியராய் ஏற்றுக்கொள்வதே இல்லை. ஏற்றுக் கொண்டிருந்தால், தமிழக மீனவன் குண்டடிபட்டுக் கடலுக்குள் செத்து மூழ்க மாட்டான்; காப்பாற்றப்பட்டிருப்பான்.

ஈழ ஆதரவுப் போராட்டங்கள் தமிழ் நாட்டெல்லைக்குள் மட்டும் சுருங்கிப் போகாமல் இந்தியா முழுவதும் பரவிப் படர்ந்திருக்கும். இந்திய அரசும் சிங்களவனுக்குப் போர்க் கருவிகளைக் கொடுத்து உதவி இருக்காது. போர்த் திட்டங்களை வகுத்துத் தந்திருக்காது. என்றோ இலங்கை அரசோடு உறவுகள் துண்டித்துப் போயிருக்கும். தனி ஈழமும் மலர்ந்திருக்கும். ஆனால் நாம் இந்தியர்கள் அல்லவே! தமிழர்களாயிற்றே! இந்தி யருக்குப் பங்காளி சிங்களர் தாமே! அன்றும் இன்றும் அது தமிழ்நாட்டுத் தமிழராயினும், ஈழத்துத் தமிழராயினும் இந்தியனுக்கும் பார்ப்பன பனியாவுக்கும் பகையாளியே! அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். நமக்குப் புரிந்தால் சரி.

இன்னுமா தமிழா இந்திய மயக்கம்?


-- தியாகு

இந்தியத் துணைக்கண்டத்திலேயே தேசிய இனவுணர்வில் முன்னுக்கு நின்றது நம் தமிழ்த் தேசம் - காசுமீரத்துக்கு அடுத்தபடி என்று வேண்டுமானால் சொல்லலாம்.

1965ஆம் ஆண்டின் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் என்பது ஒரு தமிழ்த் தேசிய எழுச்சியே. இந்த எழுச்சியின் அலைவிளிம்பில் ஏறிச் சென்றுதான் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தின் மாநில ஆட்சியைக் கைப்பற்றிக் காங்கிரஸ் ஏகபோகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

மாநில ஆட்சி என்பது அதிகாரமில்லாத அதிகாரம். பதவிக் கட்டிலில் படுத்துத் தூங்கிய தி.மு.க. அதன்பின் விழிக்கவே இல்லை. 1967 முதல் வடிந்து வற்றிய தமிழ்த் தேசிய எழுச்சி 1980களில் தமிழீழ மக்களின் விடுதலைப் போர்த் தாக்கத்தால் புத்துயிர் பெற்றது. அது வளர்ந்து செல்வதைத் தடுக்கும் பொருட்டுத் தமிழீழ மக்கள் போராட்டத்தை அடுத்தும் எதிர்த்தும் கெடுக்கப் பார்ப்பனியம் சூழ்ச்சி செய்து அதில் பெருமளவு வெற்றியும் கண்டது.

இராசீவ் காந்தியின் இந்திய வல்லாதிக்க அரசியலும், அதன் நீட்சியான இராணுவப் படையெடுப்பும் தமிழீழ மக்களுக்கு இழைத்த கொடுமைகளை மறைத்து விட்ட கட்சிகளும் ஊடகங்களும்... அவரது கொலையைச் சாக்கிட்டுத் தமிழக மக்களைத் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் திசை திருப்புவதில் பெருமளவு வெற்றி கண்டன. கடந்த 17 ஆண்டுகளுக்கு மேலாகக் கடுமையான நெருக்கடி களுக்கிடையே தமிழீழ ஆதரவுச் சுடரை அணையாமல் காத்து வந்தவை தமிழகத்தின் தமிழ்த் தேசிய ஆற்றல்களே. இதற்காக நாம் பெருமிதம் கொள்ளலாம்.

தமிழீழ ஆதரவுக் கட்சிகளாக அறியப்பட்டுள்ள மற்றக் கட்சிகளைப் பொறுத்த வரை அவ்வப்போது தமிழீழப் போராட்டத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருப்பதை நாமும் மதிக்கிறோம். ஆனால் இவை தம் தமிழீழ ஆதரவைத் தேர்தல் - கூட்டணி அரசியலுக்கு உட்படுத்தியே வந்துள்ளன. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இந்திய அரசு அறிந்தேற்க (அங்கீகரிக்க) வேண்டும், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்பன போன்ற தெளிவான கோரிக்கைகளை இந்தக் கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்துவதும் இல்லை.

இந்தப் பின்னணியில்தான் கடந்த ஓராண்டு காலமாக இராசபட்சர் தலைமையிலான சிங்களப் பேரினவாத அரசு போர் நிறுத்தத்தைக் கைவிட்டுத் தமிழீழ மக்கள் மீது தொடுத்துள்ள கொடும்போர் தமிழகத்தில் ஓர் எதிர்வினையைத் தோற்றுவித் துள்ளது. குறிப்பாகக் கடந்த நான்கைந்து மாத காலமாகத் தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான எழுச்சி தோன்றி யுள்ளது. அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல், கட்சி சாராக் குடியியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் - வழக்கறிஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், தகவல் - தொழில்நுட்பர்கள், திரைக் கலைஞர்கள் - தமிழீழ மக்களைக் காக்கக் குரல் கொடுத்து வருகின்றனர்.

2008 அக்டோபர் 14இல் தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தீர்மானங்கள் பற்றி நாம் முன்பே எழுதியுள்ளோம். அடுத்தடுத்து மனிதச் சங்கிலி, சட்டப் பேரவைத் தீர்மானம், தில்லிக்குத் தூது... என்று பல்வேறு வகையிலும் தமிழக மக்களின் உணர்வுகள் தில்லிக்கு உணர்த்தப்பட்டுள்ளன. ஆனால் தில்லிப் பேரரசு இந்த உணர்வுகளைத் துச்சமாக மதித்துச் செயல்பட்டு வருகிறது.

படைக்கலன்கள், படைப் பயிற்சி, போரியல் அறிவுரை, படைத் துறையினரின் நேரடிப் பங்கேற்பு, உளவுத் துணை, நிதியுதவி என்று சிங்கள அரசின் போர் முயற்சிக்கு எல்லா வகையிலும் இந்திய அரசு உடந்தையாக இருந்து வருவதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. ஒரு பக்கம் பாகிஸ்தானுடன் போர் முழக்கம் செய்து கொண்டே, மறு பக்கம் சிங்களப் படைக்கு உதவுவதில் பாகிஸ்தானுடன் இந்தியாவும் கூட்டாகச் செயல்பட்டு வருவது அண்மையில் அம்பலமாகியுள்ளது.

இந்திய அரசின் இந்தத் தமிழர்ப் பகைப் போக்கில் ஒருசில அதிகாரிகள் மற்றவர்களைக் காட்டிலும் முனைப்பாக இருக்கலாம். ஆனால் இந்த அதிகாரிகளே எல்லாவற்றுக்கும் பொறுப்பு என்று சொல்லி ஆளும் காங்கிரசையும், திமுக உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகளையும் காப்பாற்றும் முயற்சியை ஏற்பதற்கில்லை. ஆளும் கட்சி அல்லது கூட்டணி எதுவானாலும் இந்திய அரசு அடிப்படையில் தமிழீழத்துக்கும் தமிழர் களுக்கும் எதிராகச் செயல்பட்டு வருவதே வரலாறு.

தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி முதலில் போர்நிறுத்தம், ஆயுத உதவி நிறுத்தம் ஆகிய கோரிக்கைகளை எழுப்பினார். பிறகு போர்நிறுத்தத்தை மட்டும் கேட்கலானார். அனைத்துக் கட்சியினருடன் தில்லி சென்று தலைமையமைச்சரைச் சந்தித்த பின் "பிரணாபை கொழும்புக்கு அனுப்புங்கள்' என்று கெஞ்சும் நிலைக்குப் போய்விட்டார். பிரணாப் கொழும்பு சென்றாலும் போரை நிறுத்தச் சொல்வாரா? அல்லது தொடர்ந்து நடத்தச் சொல்வாரா? என்று கேட்கக் கூட கருணாநிதி அணியமில்லை.

அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானத்தின்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவார்கள் என்ற அச்சுறுத்தலிலிருந்து திமுக பின்னடித்துவிட்டது. சரி, மற்றக் கட்சிகளாவது அந்த அச்சுறுத்தலைச் செயலாக்கியிருந்தால், அதாவது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைத் துறந்திருந்தால், தில்லிக்கு ஒரு நெருக்குதலை ஏற்படுத்தியிருக்க முடியும். ஆனால் எந்தக் கட்சியும் அப்படிச் செய்யவில்லை. ஏன் என்பதற்கு இதுவரை பொருத்தமான விளக்கமும் இல்லை. திமுக பொதுக்குழுவே பிரணாபைக் கொழும்புக்கு அனுப்பும்படி கோரிக்கைத் தீர்மானம் இயற்றும் பரிதாப நிலை ஏற்பட்டது. சென்னை வந்த மன்மோகன் சிங் பிரணாபை விரைவில் கொழும்புக்கு அனுப்புவதாக மீண்டும் உறுதியளித்துள்ளார். பிரணாபை அப்படியெல் லாம் நினைத்த போது கொழும்புக்கு அனுப்ப முடியாது என அமைச்சர் டி.ஆர். பாலுவே பொதுக்குழுவின் கன்னத்தில் அறை விட்டாற் போல் விடை சொல்லியிருக்கிறார்.

ஈழத் தமிழ் மக்களுக்காகத் தில்லியிடம் ஒரு துரும்பைக் கூடக் கிள்ள முடியாத கருணாநிதி சகோதரக் கொலை பற்றியெல்லாம் பேசித் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பழித்தார். இந்தத் தூற்றலின் உச்சமாக மாவீரர் துயிலும் இல்லங்களையே கேலி செய்து தமிழீழ மக்களுக் காக இன்னுயிர் தந்தவர்களின் புனித நினைவையே கொச்சைப்படுத்தினார். இதை யெல்லாம் பொறுத்துக் கொண்டால், கலைஞர் ஈழத் தமிழர்களுக்கு நல்லது நடக்கச் செய்வார் என்று நம்பியிருந்தவர்கள் இலவு காத்த கிளி ஆனார்கள்.

அஇஅதிமுக தலைவி செயலலிதா தமிழினப் பகைவர். கருணாநிதியை அகற்றி விட்டு நாற் காலியைப் பிடிப்பதற்காக எதுவும் செய்யக் கூடியவர். ஈழத் தமிழர்களுக்காக அனுதாபப் படுவது போல் "சில நாள் மட்டும் நடிக்க வந்தவர்' (இவருக்காகவே இந்த வரியைப் பாடலில் சேர்த்தவர் கண்ணதாசன்) விரைவில் தன் இந்துத் துவ உள்ளுருவை வெளிப்படுத்திக் கொண்டார். தன் கூட்டணியில் இருப்பவர்கள் ஈழம் பற்றி மாறுபட்டுப் பேசுவதை இவர் சகித்துக் கொள்கிறார் என்பது பொய்த் தோற்றமே. ஏதோ கத்தட்டும் என்று வேடிக்கை பார்ப்பார், கடிக்க முற்பட்டால் அடித்து விரட்டி விடுவார். இந்த வகையில் இவரது அணுகுமுறையும் கருணாநிதியின் அணுகுமுறையும் ஒன்றே. சிபிஎம் கட்சி ஈழத் தமிழர்களை இந்த அளவுக்கு வெறுப்பது ஏன்? என்று பலரும் கேட்கின்றனர். அதன் இந்தியத் தேசிய வெறிதான் காரணம்.

இந்தியத் தேசிய நிலைப்பாட்டில் இருந்தாலும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி ஈழத் தமிழர் இனப்படுகொலைக்கு எதிராக நிலையெடுத்து அண்மைக் காலத்தில் போராடி வருவது நன்று. ஆனால் இன்னமும் இக்கட்சியினால் தமிழீழ விடுதலைக் குறிக்கோளைத் திட்டவட்டமாக ஏற்க முடியவில்லை. விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு! என்ற கோரிக்கையையும் அது எழுப்பவில்லை - இது வரை!

தமிழீழ மக்களைக் காக்க இந்தியா தலையிட வேண்டும்! என்ற கோரிக்கையின் அப்பாவித் தனத்தை அண்மைய வரலாறு வெளிப்படுத்தி விட்டது. இந்தியா ஏற்கெனவே தலையிட்டுத் தான் உள்ளது - சிங்கள அரசுக்கு ஆதரவாக! இந்தத் தலையீட்டை நேருக்கு நேர் எதிர்க்க வேண்டும். இந்தியா தமிழர்களைப் பகைவர் களாகக் கருதிச் செயல்பட்டுக் கொண்டிருக்கை யில், "தமிழர்களாகிய நாங்களே இந்தியாவின் நண்பர்கள்' என்று இன்சொல் பேசிக் கொண்டிருப்பதால் பயனில்லை. தமிழீழ மக்களுக்கு எதிரான சிங்கள அரசின் போருக்கு இந்தியா உதவியும் ஆதரவும் வழங்குவது என்ற நிலைபோய், இந்தியாவே சிங்களப் படைகளைக் கருவியாகக் கொண்டு இந்தப் போரை நடத்துவது என்ற நிலை வந்து விட்டதைக் கிளிநொச்சி தெளிவாகப் புலப்படுத்தி விட்டது. இந்தியா கொடுத்த பயிற்சியைக் கொண்டு இந்தியா கொடுத்த படைக்கலன்களால் இந்தியாவின் வழிகாட்டலுடன் சிங்களப் படை தமிழ் மக்கள் மீது போர் தொடுத்துள்ளது என்பதே சாரமான உண்மை.

தமிழர்கள் தில்லியைக் கொஞ்சிக் கெஞ்சும் ("தாசா' செய்யும்) அணுமுறையைக் கைவிட வேண்டும். தில்லியை எதிர்த்துப் போராடி நெருக்குவதே சரியான அணுகுமுறை. தமிழீழத் தேசியத்தை முரணின்றி ஆதரிக்கத் தமிழ்த் தேசிய நிலைப்பாடு தேவை. எப்படியும் இந் திய வல்லாதிக்கத் தொடர்பு நிலைப்பாடாவது தேவை. ஒருசில நண்பர்கள் தமிழ்த் தேசியத்தை முன்னெடுப்ப தாகச் சொன்னாலும், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இந்திய இறையாண்மைக்கும் ஒருமைப் பாட்டுக்கும் வணக்கம் சொல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். ஈழத் தமிழர்களை ஆதரிக் கிறோமே தவிர இந்திய இறையாண்மையை எதிர்க்கவில்லை என்று தன்னிலை விளக்கம் தந்து கொள்கின்றனர். இவர்கள் ஒன்றைத் தெளி வாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது இந்திய இறையாண்மை என்பது தமிழ்த் தேசிய இறையாண்மையை மறுப்பது ஆகும். தமிழ்த் தேசியத்தின் அரசியல் சாரம் தமிழ்த் தேசிய இறையாண்மையை மீட்கப் போராடுவதே ஆகும். மேலும், இந்தியக் குடிமக்களாக இருப்ப தாலேயே இந்திய இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற சட்டக் கட்டாயம் எதுவுமில்லை. ஒரு மாற்றுக் கருத்து என்ற அளவில் கூட இந்திய இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் மறுக்கத் துணியாதவர்களைத் தமிழ்த் தேசியத்தில் மெய்யான அக்கறை கொண்டவர்கள் என்று நம்புவது கடினமாய் உள்ளது.

நமது தமிழ்த் தேசியம் என்பது இந்திய இறை யாண்மையையும் ஒருமைப்பாட்டையும் மறு தலித்துத் தமிழக இறையாண்மையையும் தமிழ்த் தாயகத்தையும் மீட்கப் போராடுவது ஆகும். தமிழகம் தொடர்பாகவும் சரி, தமிழீழம் தொடர் பாகவும் சரி, இந்திய மயக்கம் நமக்கில்லை. தமிழீழ மக்களின் போராட்டம் - அவர்களின் சாதனைகளும் வேதனைகளும் - தமிழர்களை இந்திய மயக்கத்திலிருந்து விடுபடச் செய்து வருகின்றன. தமிழீழ விடுதலைப் போர் சிங்களப் பேரின வாதத்துக்கு எதிரானதாக மட்டும் பார்க்கப்பட்ட நிலை மறைந்து விட்டது. அதனை இந்திய வல்லாதிக்கம் தனக்கு எதிரானதாகப் பார்க்கிறது. அமெரிக்க வல்லா திக்கமும் பயங்கரவாத எதிர்ப்பு என்ற போர்வையில் எல்லாத் தேசிய விடுதலைப் போராட் டங்களையும் எதிர்ப்பது போலவே ஈழ விடுதலைக்கு எதிராகவும் முனைப்புக் காட்டுகிறது. பிரிட்டன், சீனா, உருசியா போன்ற வல்லரசுகளும் சிங்களத் தின் பக்கம் நிற்கின்றன. இந்தக் கொலைகாரக் கூட்டணிக்குத் தலைமை வகிப்பது இந்தியாவேதான்.

தமிழகத்தின் இறை யாண்மையை மறுக்கும் இந்தியா தமிழீழத்தின் இறை யாண்மையையும் மறுத்து நிற் கிறது. சிங்கள இறையாண்மைக்கு எதிரான ஒவ்வொன்றையும் இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகப் பார்த்து ஒடுக்க முற்படுகிறது. இரண்டாம் உலகப் போருக்கு முன் இட்லரின் பால் கொஞ்சிக் கெஞ்சும் கொள்கையை கடைப் பிடித்த மேலை வல்லரசுகளின் பட்டறிவு நமக்கோர் எச்சரிக்கை. இட்லரின் வழித்தோன்றல் தான் இராசபட்சர். இராசபட்சரின் இராசகுரு தான் மன்மோகன் சிங். இவரை எதிர்த்து முறியடிக்கலாமே தவிர, கொஞ்சிக் கெஞ்சி எதையும் அடைய முடியாது.

இன்னமும் இந்திய மயக்கத்திலிருக்கும் தமிழர்கள் இனியாவது அதிலிருந்து விடுபட வேண்டும். இது ஈழப் போராட்டம் நமக்களித்த கொடையாக இருக்கட்டும். மயிலே மயிலே என்றால் இறகு போடாது... இந்தியாவும் இப்படித்தான்.