கடந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட சமச்சீர்க்கல்வி அறிக்கையின்படி பள்ளிக்கல்வியில் தமிழ்வழி/ஆங்கிலவழி மணவர் விகிதம் 80:20 என்று உள்ளது....
ஆங்கிலவழிப் பள்ளிகளின் பெருக்கம் இனியும் தொடர்ந்தால்... இதுவே 20:80 ஆகி.. 100:0-ஐ நோக்கிச்சென்றுவிடும் ஆபத்துள்ளது!
சமச்சீர்க்கல்வி அமலாக்கத்திற்கு அழுத்தம் தரும் அதே சமயத்தில், இடைக்கால நடவடிக்கையாக ஆங்கிலவழி மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் விழுக்காட்டிற்கு ஒரு உச்சவரம்பு நிர்ணயித்து தனியார்/அரசுப் பள்ளிகட்கு அவசர ஆணை/சட்டம் பிறப்பித்திட அரசினரை நெருக்கிட வேண்டும். (ஏற்கனவே, அரசுதவிப் பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புகளின் எண்ணிகையானது, தமிழ்வழி வகுப்புகளின் எண்ணிக்கைக்கு மிகாமல் இருக்க நடப்பு கல்வியாண்டு முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக நாளிதழ் செய்திகள் கூறுகின்றன. அதாவது, அரசுதவிப் பள்ளிகளில் இப்போதைக்கு 50க்கு 50க்கு என தமிழ்/ஆங்கில வழி வகுப்புகள்..!)
அண்மை நாளிதழ் செய்திப்படி.. ஒரே பாடத்திட்டமுறையை செயலாக்கும் சமச்சீர்க்கல்வி வந்தால் விரும்பிய பாடத்திட்டத்தை தெரிவு செய்யும் பெற்றோர்களின்/மாணவர்களின் உரிமை போய்விடுமே என்று ஓலமிட்டவர்கள் (பின்னணியில் கொள்ளைவிலை பாடநூல்கள் விற்கும் தனியார் பதிப்பகங்கள்?), இப்போது அதனைக் கைவிட்டு “சமச்சீர்க்கல்வி விசயத்தில் பயிற்றுமொழியைச் சம்பந்தப்படுத்தி குழப்பக்கூடாது” என்று புதுப்பாட்டு பாடத்தொடங்கியிருக்கிறார்கள்.
சமச்சீர்க்கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டால் “ஒரே பாடத்திட்டம்” மட்டும் அமலாக்கப்பட்டு, சாதுரியமாக, “ஒரே பயிற்றுமொழி” கொள்கை கழற்றிவிடப்படும் வாய்ப்புள்ளது (ஏனெனில், கல்வி வணிகர்களுக்கு காசு பறிக்க ஆங்கிலவழி எனும் கவர்ச்சி அம்சமாவது தேவைப்படுகிறது!..
மேலும், உலகமயம் மற்றும் உலகொன்றிய பார்வை (cosmopolitan view) குறித்து பேசும் ”அறிவுஜீவி”களும் ஆங்கிலவழியை இழுத்துப்பிடிக்கும் நிலையும் உள்ளது!)..
மேலும், சமச்சீர்க்கல்வி அறிக்கையில், மொழிச்சிறுபான்மையர் (தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன்) தம் தாய்மொழியைக் கற்க அளிக்கப்பட்டுள்ள வாய்ப்பு, மும்மொழித்திட்டத்திற்கு கம்பளம் விரித்திட வாய்ப்பாகக்கூடாது என்ற கவலையும் உள்ளது!
நம்முன் உள்ள வெட்கிட வைக்கும் வினாக்கள்...
தம்மவர்க்கு மட்டும் தமிழ்ப் பெயரைச்சூட்டிக்கொண்டால் மட்டும் போதுமா?.
நம்மில் எத்துணை பேர்......
-இல்லங்களுக்கும் நிறுவனங்களுக்கும் தமிழில் பெயரிட்டிருக்கிறோம்?
-சூட்டிய தமிழ்ப் பெயரை மொழிபெயர்க்காமல் உள்ளபடியே ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறோமா?
நிறுவனங்களின் பெயர்ப்பலகை / ஊழியர்களின் அடையாள அட்டை / வருகைப் பதிவேடு மற்றும் அன்றாட கணக்குப்பதிவுகளை தமிழில் பேணுகிறோமா?
நிறுவன நிர்வாகம்-ஊழியர்கள் / நிர்வாகம்-நுகர்வோர்கள்... இவர்களுக்கிடையேயான தரவு/தகவல் பரிமாற்றத்தொடர்புகளை தமிழில் மேற்கொள்கிறோமா?
…………..மொத்தத்தில், ஒரு நிறுவனம், அயலகம்/அயலவர் வணிகத்தொடர்புக்கு மட்டும் ஆங்கிலத்தை பயன்படுத்தும் வகையில் – அதாவது, புறத்தொடர்பு தமிழ் ஆவணங்களை மொழிபெயர்க்கும் பணியோடு மட்டும் நிற்கும் – கோப்பினுள் மட்டும் இருக்கும் – உள்ளுறை மொழி(Latent language)யாக மட்டுமே ஆங்கிலம் இருக்கட்டும்!.
-----அகமத் கனி
No comments:
Post a Comment